ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, விளையாடிய நான்கு லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இதில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 16 வயதே நிரம்பிய தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
இந்தத் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ஷஃபாலி, 161 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டுடன் 161 ரன்கள் குவித்திருக்கிறார். அவர் எதிரணியினர் வீசும் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசுவதால் ஷஃபாலியை பெரும்பாலான ரசிகர்கள் பெண் சேவாக் என்றே அழைக்கின்றனர். மேலும், இந்த அதிரடி ஆட்டத்தால் ஷஃபாலி வர்மா மகளிர் டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளார்.
நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஷஃபாலி வர்மா மிகவும் குறும்புத்தனமான வீராங்கனை. அவர் இந்திய அணிக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் அளித்துள்ளார்.
அவருடன் பேட்டிங் செய்யும்போது அவர் நமக்கு ஊக்கமளித்து நம் மீது இருக்கும் பிரஷரை குறைப்பார். இதுபோன்ற வீராங்கனைகள் அணியில் இருக்க வேண்டியது அவசியம். ஷஃபாலி இந்திய அணியில் விளையாடுவதை மகிழ்ச்சியானதாக கருதுகிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது இந்திய அணியில் இருக்கும் வீராங்கனைகள் நீண்ட நாட்களாக ஒன்றாக உள்ளனர். இதனால் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்கின்றனர். இது அனைத்து வீராங்கனைகளுக்கும் எளிதாக இருக்கும். வரும் போட்டிகளில் அனைவரும் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். நான் இந்தத் தொடரில் பெரிய பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை என்றாலும் எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது.
கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தபோது, அணியாக செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்தோம். தற்போது அவ்வாறே இந்திய அணி இருக்கிறது. நாங்கள் ஒரு வீரரை சார்ந்து இல்லை. கடந்த காலத்தை நினைத்து வருந்துவதால் அதை மாற்ற முடியாது. எனவே அதை நினைப்பதை நிறுத்திவிட்டு சரியான விஷயங்களை செய்து வெற்றி பெறுவோம் என்றார்.