பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு சமீபத்தில் பாபர் அசாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இது குறித்து பாபர் அசாமின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குக் குறித்து பேசிய பாபர் அசாம் என் மீது தொடுக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் வழக்கினால் எனது கிரிக்கெட் வாழ்க்கை பாதிப்படையவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாபர் அசாம், ”இது எனது தனிப்பட்ட பிரச்சினை. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. எனது வழக்கறிஞர் அதைக் கையாளுகிறார். வாழ்க்கையில் எல்லா வகையான தடைகளையும் நாங்கள் எதிர்கொள்கிறோம். நான் அதற்குப் பழகிவிட்டேன். இந்தப் பிரச்சினை எனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாபர் அசாமின் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்ந்த பெண் கூறுகையில், "பாபர் அசாம் கடந்த 10 ஆண்டுகளாக என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். மேலும் என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறிவிட்டு, பிறகு வற்புறுத்தி கருகலைப்புச் செய்யவைத்தார்.
இது குறித்து வெளியில் கூறினால் என்னைக் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டல்விடுத்தார்" என்று தெரிவித்திருந்தது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிங்க: இந்திய அணியின் வலிமையை ஐபிஎல் உயர்த்தியுள்ளது' - டெண்டுல்கர்