பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் வக்கார் யூனிஸ். இவர் சமீபத்தில் கலந்துகொண்ட தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், 1999ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்தும், அதில் சச்சினின் பேட்டிங் குறித்தும் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், 'சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு நாங்கள் வெற்றி இலக்காக 271 ரன்களை நிர்ணயித்திருந்தோம். இந்த போட்டியில் நானும், அக்ரமும் இணைந்து இந்திய அணியின் பேட்டிங்கை நிலைகுலைய செய்தோம். மேலும் முஷ்டாக் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.
ஆனால் அந்த போட்டியில் இந்திய அணியின் சச்சின் மற்றும் நயன் மோங்கியாவின் ஆட்டம் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதில் இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்க்கு 136 ரன்களை குவித்திருந்தனர். பின் மோங்கியா தனது விக்கெட்டை இழந்தும், சச்சின் தனி ஒருவராக அணியை வழிநடத்தி சென்றார்.
இறுதியில் இந்திய அணியின் வெறிக்கு 16 ரன்கள் தேவைப்படும்போது, ஒருவழியாக அவரின் விக்கெட்டை கைப்பற்றிய பின்பே, 12 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் அப்போட்டியை வென்றோம். உண்மையை சொல்லப்போனால் சச்சின் ஒரு மிகச்சிறந்த வீரர். அவர் அன்று விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா அப்போட்டியில் வெற்றியை ஈட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை' என்று தெரிவித்தார்.