இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக டிச.17ஆம் தேதி தொடங்கி டிச.19ஆம் தேதி முடிவடைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ரன்னை எடுத்த அணி என்ற மோசமான சாதனையையும் படைத்தது.
சச்சின் விளக்கம்
இப்போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்த கரணங்களை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சச்சின், “முதல் இன்னிங்சில் இந்தியா நன்றாக பேட்டிங் செய்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸைப் பார்க்கும் பொழுது எங்கள் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் பந்து ஸ்விங் ஆகமல் இருந்ததால் பேட்ஸ்மேன்களால் அதனை சமாளிக்க முடியவில்லை.
ஆனால் இத்தோல்விக்கு அதுமட்டும் காரணம் கிடையாது. அதைவிட பல்வேறு காரணங்களும் இடம்பெற்றுள்ளன. வெளிநாட்டில் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். அதனால் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் பேட்ஸ்மேன்கள் இன்னும் அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா நைட் வாட்மேனாக களமிறங்கியது நினைவிருக்கிறது. அது சரியான முடிவுதான். ஆனால் அடுத்த நாள் ஆட்டத்தை அவரால் சமாளிக்க முடியுமா என்பதையும் அணியினர் ஆலோசித்திருக்க வேண்டும்.
அதேபோல் இப்போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பந்தை தடுக்க முயற்சிக்காமல், ஷாட்களை விளையாடத் தொடங்கினர். இதனால் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதனால் இனி வரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் பந்தை தடுத்தாடினால், நிச்சயம் அது அணிக்கு பலனை அளிக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கடைசி டெஸ்ட் போட்டி சிட்னிக்கு மாற்றம்?