கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் பொம்மி பாங்வா (Pommie Mbangwa) உடனான சமூக வலைதள நேர்காணலில் இணைந்தார்.
இதில் பேசிய பிரெட் லீ, தற்போது பலரும் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் என சச்சின் மற்றும் லாராவை குறிப்பிடுகின்றனர். நானும் அதனை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ஆல்ரவுண்டர் காலிஸ்தான் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என கருதுகிறேன்.
ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்குள் வந்ததும், அதிக நேரம் தாக்குப் பிடித்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டவர். அவருக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும். நான் அவருக்கு எதிராக அதிகமாக விளையாடியுள்ளதால் அவரை நான் சிறந்த பேட்ஸ்மேன் என ஒப்புக்கொள்வேன்.
அதேபோல், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா, பந்துவீச்சாளர் எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறாரோ, அதற்கேற்றார் போல் மைதானத்தின் எந்த திசையிலும் சிக்சரை பறக்கவிடும் திறமை அவரிடம் உள்ளது. இதனாலேயே சச்சின் மற்றும் லாராவை அனைவரும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் என கருதுகின்றனர்.
ஆனால் எனது பார்வையில் சச்சின் ஒரு சிறந்த வீரர், இருப்பினும் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட்டர் என்றால் அது ஜாக் காலிஸ்தான் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாலியல் குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஹய்தி கால்பந்து சம்மேளனத் தலைவர்...!