ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரியன் ஹாரிஸ். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் என 48 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி 140க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர் காயங்களால் அவதிப்பட்ட ஹாரிஸ், 2015ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். அதன்பின் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் பயிற்சி திட்டங்களில் அங்கம் வகித்தார்.
தற்போது நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டுவரும் ஹாரிஸ், தற்போது மீண்டும் ஒரு அணியின் பவுலிங் பயிற்சியாளராகவுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிரபல டி20 தொடரான பிக்பேஷ் டி20 தொடரில் விளையாடும் பிரிஸ்பேன் ஹீட் அணி, தங்கள் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஹாரிஸை நியமித்துள்ளது.
அதன்படி அடுத்த மாதம் தொடங்கவுள்ள பிக்பேஷ் சீசனின் முதல் பாதிவரை ஹாரிஸ் பவுலிங் கோச்சாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட ஐசிசி உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் பிக்பேஷ் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறுவார்.
பிக்பேஷ் தொடரின் இரண்டாவது சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் விளையாடிய ஹாரிஸ், தற்போது அதே அணியின் பவுலிங் கோச்சாகியுள்ளார். இந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கும் பிக்பாஷ் தொடரின் முதல் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி சிட்னி தண்டர் அணியை எதிர்கொள்கிறது.