இந்தாண்டு நடைபெறவிருந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்த உடனே, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான பணியில் பிசிசிஐ களமிறங்கியது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி அணி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹாக், "இந்தாண்டு ஐபிஎல் தொடரில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மிகச்சிறந்த வீரர்களை ஆர்.சி.பி தன்வசப்படுத்தியுள்ளது.
இப்போது, தொடக்க வீரராக ஆரோன் ஃபிஞ்சை சேர்ப்பதன் மூலம், பவர் பிளே ஓவர்களில் ஆர்.சி.பியால் ஆதிக்கம் செலுத்த முடியும். நடுத்தர வரிசையில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலும்.
மேலும், அவர்களின் பந்துவீச்சு வரிசையிலும் டேல் ஸ்டெய்ன், கேன் ரிச்சர்ட்சன் போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஆர்.சி.பி ஒரு சிறந்த அணியாக விளங்கியுள்ளது. இதன் காரணமாகவே இந்தாண்டு கோப்பையை வெல்லும் திறன் ஆர்.சி.பியிடம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.