வருகிற பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான மைதானங்கள், தேதி ஆகியவற்றை கடந்த மாதம் பிசிசிஐ அறிவித்தது.
அதற்கு முன்னதாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், "நாங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கொண்ட சுற்றுப்பயணத்திற்குத் தயாராகிவருகிறோம். இச்சூழலில் வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல், வைரஸ் குறித்த கவலைகள் வீரர்களிடம் நிறைந்துள்ளன.
இதனால் வீரர்கள் உடலளவிலும், மனதளவிலும் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதனால் இலங்கை அணியுடனான தொடரின்போது ஒரு உளவியலாளருடன் சுற்றுப்பயணத்தைத் தொடரவுள்ளோம். இதனால் எங்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
அதேசமயம் வைரஸ் தொற்றிலிருந்து எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிவருகிறோம். மேலும் டெஸ்ட் தொடரையும் வெல்வதற்கு எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் டேல் ஸ்டெயின்!