ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவிற்கு இத்தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியக் கேப்டன் விராட் கோலி, தங்களது குழந்தைப் பிறக்கும் தேதியை ஒட்டி, கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய ஆஸி., நட்சத்திர வீரர் ஸ்மித், ”இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா இடம்பெறாதது, அந்த அணிக்கு மிகப்பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. ரோஹித் சர்மா ஒரு அதிரடியான தொடக்க வீரர். கடந்த சில ஆண்டுகளாக அவர் அணியின் மிகப்பெரும் உந்துகோலாக உள்ளார்.
இருப்பினும் இந்திய அணியில் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் போன்ற சிறப்பான இளம் தொடக்க வீரர்களும் உள்ளனர். ரோஹித் சர்மாவின் இடத்தை அவர்கள் நிரப்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் விடுப்பு, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற கடுமையான சூழலை சமாளித்து ஆடும் திறன் கோலிக்கு உள்ளது. ஆனால் தற்போது அவர் விலகியுள்ளதால், அவரது இடத்தை யார் நிரப்புவர் என்ற குழப்பத்தில் இந்திய அணி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் 7 : சென்னையின் எஃப்சி vs ஜாம்ஷெட்பூர் எஃப்சி!