நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
இதனிடையே இப்போட்டியில் 41 பந்துகளில், தலா மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 61 ரன்கள் எடுத்திருந்த போது ரோஹித் சர்மாவின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, இந்திய பந்துவீச்சின்போது அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார். டி20 தொடரையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மாவின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர், நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக இந்திய அணி நிர்வாகம் ஐஏஎன்எஸ் செய்தி தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ இன்னும் சில மணிநேரங்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக பிரித்விஷா கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்து ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவிற்குப் பதிலாக கே.எல். ராகுல் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில், நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என இரண்டிலும் அசத்தி, அவர் தொடர்நாயகன் விருதை வென்றதுதான் இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பி.பி.எல். அணியின் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் தேர்வு!