இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று யார் கோப்பை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 286 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 131, மார்னஸ் லபுசானே 54 ரன்கள் அடித்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனிடையே இப்போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காயம் ஏற்பட்டதால் இந்திய வீரர் ஷிகர் தவான் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால், 287 ரன்கள் இலக்குடன் சேஸிங்கை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன், கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல். ராகுல் 19 ரன்களில் அஷ்டன் ஏகார் பந்துவீச்சில் அவுட்டானார்.
பின் கேப்டன் கோலியுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம்செய்து அசத்தினார். மறுமுனையில், கோலியும் ரோஹித் சர்மாவுக்கு ஸ்ட்ரைக் வழங்கி விளையாடினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் தனது 29ஆவது சதத்தை பூர்த்திசெய்தார்.
ரோஹித் - கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் சர்மா 119 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, நான்காவது வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், கோலி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருக்க இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
இதனால், இப்போட்டியில் கோலி சதம் விளாசுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 89 ரன்களில் ஹசல்வுட் பந்துவீச்சில் போல்டானார். பின் ஸ்ரேயாஸ் ஐயர்- மனீஷ் பாண்டே ஜோடி பவுண்டரிகளாக அடிக்க, இந்திய அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதனால், இப்போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் சதம் விளாசிய இந்திய வீரர் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இத்தொடரில் இரண்டு அரைசதம் உள்பட 183 ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த ஒருநாள் தொடரின்மூலம், இந்திய அணி கடந்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் 2-3 என்ற ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: 40 விநாடிகளிலேயே வெற்றிபெற்று கம்பேக் தந்த மெக்கிரிகோர்!