சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு இத்தொடரில் விளையாடி வருகின்றனர்.
ராய்ப்பூரில் நேற்று (மார்ச் 7) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து லெஜண்ட்ஸ், வங்கதேச லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி, வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் ஆடிய வங்கதேச லெஜண்ட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மஷூத் அதிகபட்சமாக 31 ரன்னும், ரஹ்மான் 30 ரன்னும் அடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச லெஜண்ட்ஸ் அணியால் 113 ரன்கள் மட்டுமே அடித்தது.
அதன்பின் 114 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான கெவின் பீட்டர்சன் அதிரடியாக ஆடி 17 பந்தில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 42 ரன்களை விரைவில் சேர்த்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த கெவின் பீட்டர்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஏப்ரல் 9 இல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்