ஆகாஷ் சோப்ரா தனது அதிகார்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஐபிஎல் அணிகளின் பலம், பலவீனம் பற்றி பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 12 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்தையும் மறக்க வேண்டும். இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதால் எந்த அணிக்கும் சாதகமான சூழல் இருக்காது. இரு அணிகளுக்கும் பொதுவான மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்போது, உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு, ஆடுகளம் தன்மை உள்ளிட்ட எதுவும் இருக்காது. எனவே ஒவ்வொரு அணிக்கும் புதுமையாகவே இருக்கும்.
சென்னை, மும்பை அணிகள் சிறப்பாக இருக்கின்றன. தொடக்கத்தில் மந்தமாக விளையாடினாலும் தொடரின் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை வலுவான பவுலிங் இல்லாமல் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு உள்ளூர் மைதானத்தில் வைத்து மூன்று போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மைதானங்கள் பெரிய அளவில் இருப்பதால் கொஞ்சம் சாதகமான சூழல் அவர்களுக்கு உள்ளது. ஏனென்றால் அந்த அணியின் ஸ்பின் பவுலர்களான சஹால், நேஹி ஆகியோர் மிகப்பெரிய பங்கு வகிப்பார்கள் என நம்புகிறேன்.
இதேபோல் நல்ல ஸ்பின் பவுலர்களை கொண்டுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி அணிகளும் முக்கிய பங்காற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.