இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய பேண்டசி லீக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் மிகப்பெரிய திருவிழா போன்று நடைபெறும். இந்நிலையில் அடுத்தாண்டுக்கான சீசன் தொடங்க இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களது அணிக்கு தேவையானவற்றை தற்போதே செய்யத் தொடங்கிவிட்டன.
அந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம், தங்களது அணியில் பெண் ஒருவரை நியமித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளது. அந்த அணியின் மசாஜ் தெரபிஸ்ட்டாக நவனிதா கௌதம் என்ற பெண்ணை நியமித்துள்ளனர். அவர் பெங்களூரு அணியின் தலைமை மசாஜ் தெரபிஸ்ட்டான இவான் ஸ்பீச்லி உடன் பணிபுரிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் பெண் ஒருவரை அணியில் உதவி ஊழியராக சேர்த்த அணி என்ற பெருமையை பெங்களூரு அணி (ஆர்சிபி) பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய அந்த அணியின் நிர்வாகத் தலைவர் கூறுகையில், விளையாட்டு என்பது சிறந்த ஒன்று. அதில் விளையாடுபவர்களுக்கு சம உரிமை இருப்பது போல் பணியாளர்களுக்கும் சம உரிமை என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து விளையாட்டுகளிலும் பெண்கள் பங்கேற்பதோடு அதில் வெற்றி பெற்று அதை சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்த வரலாற்று நிகழ்வில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நவனிதாவிடம் உள்ள திறமையை கண்டு ஆர்சிபி அணி பிரம்மிப்படைந்துள்ளோம் என்றார்.