வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஜமைக்காவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் அனுமா விஹாரி சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் மாஸ் காட்டிய அவர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார்.
இதனால், இந்திய அணி இப்போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தனது ஆறாவது டெஸ்ட் போட்டியிலேயே ஒரு சதம், ஒரு அரைசதம் விளாசிய அனுமா விஹாரி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், தனது ஆட்டம் குறித்து அவர் கூறுகையில்,
"ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்வதில் தீவிரமாக இருந்தேன். ஒன்பது ஆண்டுகளாக முதல் தர போட்டியில் விளையாடி வந்ததால், இது போன்ற சூழலில் பேட்டிங் செய்ய உதவியது. நான் கடந்த இரண்டு மாதங்களாக வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எனது பேட்டிங்கில் முன்னேற்றம் அடைந்ததற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் காரணம். முதல் இன்னிங்ஸில் நான் ஃப்ரென்ட் ஃபுட்டில்தான் (front foot) அதிகம் பேட்டிங் செய்து வந்தேன். இதனால், எனது காலை சற்று வளைத்து ஆட சொன்னார். அவர் தந்த அறிவுரைதான் என்னுடைய பேட்டிங்கிற்கு உதவியது" என்றார்.
ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது இருந்தது. அதனை தவிடுபொடியாக்கும் வகையில் அனுமா விஹாரி பேட்டிங் செய்து அசத்தினார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரரும் இவர்தான். இவர் இரண்டு போட்டிகளில் இரண்டு அரைசதம், ஒரு சதம் என 289 ரன்கள் எடுத்துள்ளார்.