இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி கங்குலி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தச் சூழலில் கங்குலியின் நியமனம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கங்குலி இயல்பாகவே ஒரு சிறந்த தலைவர் என்றார். அவரைப் போன்று கிரிக்கெட் நிர்வாகத்தில் அனுபவம் உள்ள நபர்கள் பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்படுவது இந்திய கிரிக்கெட் அணி நல்ல பாதையில் செல்வதற்கான அறிகுறி எனக் கூறினார்.
மேலும் பிசிசிஐயில் முக்கியமான ஒன்றாக தேசிய கிரிக்கெட் அகாதெமி உள்ளதாக சொன்ன ரவி சாஸ்திரி, அதுவே பல கிரிக்கெட் வீரர்களை இந்திய அணிக்குத் தருகிறது என்றும் அங்கு ராகுல் டிராவிட் உள்ளார் எனவும் குறிப்பிட்டார். டிராவிட்டுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த அவர், கண்டிப்பாக பல நல்ல விஷயங்கள் நடைபெறும் என்றார்.
இறுதியாக ரவி சாஸ்திரி, பிசிசிஐ தலைவராக கங்குலியும் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் ராகுல் டிராவிட்டும் உள்ளனர். இதை விட சிறந்த ஜோடி இந்திய அணிக்கு தேவையா எனத் தெரிவித்தார்.