இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பைத் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் குரூப் ஏ, பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்த்து விளையாடிவருகின்றது.
இதன் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த கர்நாடக அணியில் கௌதம் அரைசதமடித்து அணியின் ஸ்கோர் கணக்கை உயத்தினார். இதனால் கர்நாடக அணி தனது முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக படிக்கல் 78 ரன்களை எடுத்திருந்தார். தமிழ்நாடு அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு முரளி விஜய்-அபினவ் முகுந்த் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. இதில் முரளி விஜய் 32 ரனகளிலும் அபினவ் முகுந்த் 47 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அபரஜித் தனது பங்கிற்கு 37 ரன்களைச் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 165 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. தமிழ்நாடு அணி சார்பில் தினேஷ் கார்த்திக் 23 ரன்களுடனும் ஜெகதீசன் 6 ரன்களுடனும் களத்திலுள்ளனர். கர்நாடக அணி சார்பில் கௌதம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க:கிரிக்கெட்டை தொடர்ந்து கபடியிலும் மாஸ் காட்ட காத்திருக்கும் தமிழ்நாடு!