ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், மற்றொன்றில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளன.
இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 7ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இந்த அணியில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா மீண்டும் இணையவுள்ளார்.
இந்நிலையில் ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்றால், அவர் எந்த வரிசையில் களமிறங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார்.
ஆனால் அதன்பின் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கு மேலாக அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவும் இல்லை. இதனால் அவர் இந்திய அணியில் எந்த வரிசையில் களமிறங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில், "ரோஹித் அணியில் இடம்பெறுவது மயாங்க், விஹாரி ஆகியோரது இடங்கள் தற்போது கேள்விகுறியாகியுள்ளன.
என்னைப் பொறுத்தவரை மயாங்க் அகர்வாலை அணியிலிருந்து விலக்குவது சரியான முடிவு கிடையாது. ஏனெனில் அவர் கடந்த 18 மாதங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
அதேசமயம் ரோஹித் சர்மா நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் விளையாடாததால் அவரைத் தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் அவர் தொடக்க வீரராக களமிறங்குவாரா? அல்லது நடுவரிசையில் களமிறங்குவாரா? என்பதை அணி நிர்வாகம்தான் முடிவுசெய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:AUS vs IND: மெல்போர்னில் பயிற்சியை மேற்கொள்ளும் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள்!