நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதற்கு முன்னதாக ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதன் முதல் பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணி வென்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி தற்போது நடந்துவருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா - மயாங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.
அதில் மயாங்க் அகர்வால் 32 ரன்களில் வெளியேற, தொடர்ந்து வந்த கேப்டன் சுப்மன் கில் 24 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களிலும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளைக் கொடுத்து பெவிலியன் திரும்பினர். இவர்கள் அனைவரும் ஒருமுனையில் விக்கெட்டுகள் கொடுத்துச் சென்றாலும், மறுமுனையில் இளம் வீரர் ப்ரித்வி ஷா அதிரடியில் அட்டகாசப்படுத்தினார்.
இவருடன் விஜய் சங்கரும் சேர்ந்துகொள்ள இந்திய அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. ஒருமுனையில் ப்ரித்வி ஷா சதம் விளாசி தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட, இந்திய அணி 30 ஓவர்களில் 240 ரன்களைக் கடந்தது. பின்னர் 100 பந்துகளில் 150 ரன்களை ப்ரித்வி ஷா எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 22 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அதன்பின் விஜய் சங்கர் 58 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியாக இந்திய அணி 49.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 372 ரன்கள் எடுத்தது.
காயம் காரணமாக நியூசிலாந்து ஏ அணியுடனான தொடருக்கு ப்ரித்வி ஷா செல்வாரா, மாட்டாரா என்ற நிலையில், தற்போது பயணம் செய்து 150 ரன்கள் எடுத்துள்ள சம்பவம், இந்திய அணிக்குள் மீண்டும் அவர் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: முதல் நிமிடத்திலேயே கோல்... நெதர்லாந்தை பழிதீர்த்த இந்தியா!