ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தத் தொரை பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 எனக் கைப்பற்றியது. இதில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் நிக்கோலஸ் பூரானுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை லக்னோவில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியின்போது பூரான் பந்தை சேதப்படுத்தியதாகப் போட்டியில் பங்கேற்ற கள நடுவர்கள், மூன்றாவது, நான்காவது நடுவர் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை தனது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அவர் மீது வேறு எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
இது குறித்து ஐசிசி வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரான் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் பந்தை தனது கை நகத்தால் சேதப்படுத்தும் காணொலி வெளியானது. எனவே அவர் பந்தின் தன்மையை மாற்ற முயற்சிக்கும் குற்றத்திற்காக அவருக்கு நான்கு போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தடை காரணமாக நிக்கோலஸ் பூரான் அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது சாதனையில் ஐந்து குறைபாடு புள்ளிகள் சேர்க்கப்படும்.
நான் செய்த தவறுக்காக அணியின் சக வீரர்கள், எனது ஆதரவாளர்கள், ஆப்கானிஸ்தான் அணி என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஐசிசி எனக்கு அளித்த தண்டணையை ஏற்றுக்கொள்கிறேன் என நிக்கோலஸ் பூரான் தெரிவித்தார். மேலும் இனி இந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டேன் என்ற அவர் நிச்சயமாக அதிக பலத்துடன் அணிக்குத் திரும்புவேன் என்றார்.