கடந்த ஆண்டு செப்டம்பரில் கரீபியன் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இதனை வைத்து சென்னை சூளை பகுதியில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடைபெற்றுள்ளது. அந்தச் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்சம் ரூபாய் இழந்ததாக வேப்பேரி காவல் துறையினரிடம் புகாரளித்தார்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சூளை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராகுல் டி ஜெயின் (24), தினேஷ் குமார் (29) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அவர்கள் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய லேப்டாப்கள், 53 லட்ச ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி ஜெய்ஷா என்பது தெரியவந்தது.
நான்கு மாதங்களாக மயிலாப்பூரில் தலைமறைவாக இருந்த ஜெய்ஷா, பிப்.9ஆம் தேதி தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் தலைமறைவாக இருந்துவந்த நிலையில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த பைனான்சியர்களான அக்சய், விக்ரம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: ரெட்டேரி விடுதியில் தலைவிரித்தாடும் சூதாட்டம்... பணியாளர் தற்கொலை...!