இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, நேற்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்தின் இரண்டு இடங்களிலும் அடைப்பு இருப்பதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டதாகவும், அவரது உடல்நிலையில் ஆபத்து ஏதும் இல்லை என மருத்துவ நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.
பின்னர் கங்குலியின் நிலை குறித்து அறிய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேரடியாக மருத்துவமனைக்கு சென்று கங்குலியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். கங்குலியை பார்த்து நலம் விசாரித்ததாகவும், அவர் தன்னிடம் பேசியதாகவும் மம்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சவுரவ் கங்குலியிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். விரைவாக அவர் மீண்டு வரவேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: ஒடிசாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஈஸ்ட் பெங்கால்!