இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மேலும், இப்போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவி, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் இளம் வீரர்கள், உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடுவதால் அவர்களின் திறனும், நம்பிக்கையும் அதிகரித்ததுடன், இந்திய அணியின் வலிமையும் உயர்ந்துள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் பாரட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், "இந்திய அணிக்காக விளையாட சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் தயாராகிவிட்டனர். அவர்களின் பயமறியா பேட்டிங் திறனுக்கு ஐபிஎல் ஒரு வழிகாட்டியாக இருந்தது என்பது தான் உண்மை.
ஏனெனில் எங்களது காலங்களில் நாங்கள் யாரும், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, மெக்டர்மோட் போன்றவர்களுடன் விளையாடியது கிடையாது. அதனால், அவர்களது பந்துவீச்சை சமாளிக்க நாங்கள் பெரும் சிரமத்திற்குள்ளானோம்.
ஆனால் தற்போதுள்ள வீரர்கள் அப்படி கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாட ஐபிஎல் தொடர் வாய்ப்பளித்துள்ளது. அதனால் சர்வதேச போட்டிகளில் அவர்களை எதிர்கொள்வது எளிதானதாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாட தயாராகிவிட்டனர் என்று தெரிவித்தேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ’ஜமைக்காவுக்கு கோவிட் தடுப்பூசி கொடுத்ததற்கு நன்றி’ - கிறிஸ் கெயில்!