இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் இருநாட்டு ரசிகர்கள் மத்தியிலும் எப்போதும் ஒரு பரபரப்பு இருப்பது வழக்கமான ஒன்றுதான். இதனிடையே இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
இரு நாட்டுக்கம் இடையே பல்வேறு அரசியல் முரண்பாடுகள் காரணமாக இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி வசிம் கான், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 தொடரில் பங்கேற்கவில்லை என்றால், இந்தியாவில் 2021ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் தங்கள் அணி பங்கேற்காது என்று சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தற்போது மீண்டும் இது குறித்து பேசியுள்ள வசிம் கான், பாகிஸ்தானில் ஆசிய கோப்பை டி20 தொடர் நடத்துவதற்கான உரிமையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது. ஆனால் இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால் அது குறித்த முடிவை ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் எடுக்க வேண்டும். இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
மேலும், இந்திய அணியின் போட்டிகளை பாகிஸ்தானிற்கு பதிலாக வேறு பொதுவான மைதானத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுத்தாலும் சரி. இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் சந்திக்க நேரிட்டால் அந்தப் போட்டியை எங்கு நடத்தலாம் என்பது குறித்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், இந்தியாவில் 2021ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று வெளியான செய்திகளை மறுத்த அவர், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் அது போன்று கூறவில்லை எனவும் ஐசிசி நடத்தும் ஒரு தொடரில் பங்கேற்க முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறு என்றும் அவர் கூறினார்.
மேலும் 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும்போது தங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும், தங்களுக்கு விசா வழங்கப்படுமா என்பது குறித்தே ஆலோசிக்கப்பட்டது. மேலும் தற்போது உள்ள சூழலில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்றார்.
இறுதியாக பிசிசிஐ தலைவர் கங்குலியை ஒரு கிரிக்கெட் வீரராகவும் நல்ல மனிதராகவும் நான் மதிக்கிறேன். ஆனால் எங்களுக்குள் இதுவரை எந்த சந்திப்பும் நிகழவில்லை. சமீபத்தில் எந்தவொரு ஐசிசி கூட்டமும் நடைபெறாத காரணத்தால் பிசிசிஐ சார்ந்த யாரையும் சந்திக்க இயலவில்லை. தற்போது இந்த விஷயம் குறித்து விவாதிக்க சரியான நேரமில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் இரு நாட்டுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.