இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ் டைலர் 86 ரன்களை அடித்தார்.
அதன் பின் தனது முதல் இன்னின்ஸை தொடங்கிய இலங்கை அணி அஜாஸ் படேலின் சுழலில் திணறி வருகிறது. அந்த அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளையும் தனது அபார பந்து வீச்சினால் படேல் வீழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணி சார்பில் அனுபவ வீரர்களான குஷால் மெண்டிஸ் 53 ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 50 ரன்களும் எடுத்தனர். அதன்பின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணியில் டிக்வெல்லா 39 ரன்களுடனும், லக்மல் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் 22 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கவுள்ளது.