பாகிஸ்தானில் 2009ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டில் எந்த ஒரு பெரிய கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. இதனிடையே, ஜிம்பாப்வே அணி 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், இலங்கை அணி 2017ஆம் ஆண்டில் டி20 தொடரிலும் பங்கேற்றது.
தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதனால், இந்தத் தொடர் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையே காராச்சியில் நடைபெற வேண்டிய முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமின் சதத்தால், அந்த அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து, 306 ரன்கள் இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 10.1 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், ஸ்நேகன் ஜெயசூர்யா - ஷனகா ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்து அணியை சரிவிலிருந்து மீட்டது.இந்த ஜோடி 177 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக விளையாடிய ஸ்நேகன் ஜெயசூர்யா 96 ரன்களிலும், ஷனாகா 68 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் ஷின்வாரி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு மிகவும் ஸ்பெஷலானவை. ஏனெனில், பாகிஸ்தான் அணி 10 வருடங்களுக்குப் பிறகு கராச்சியில் தனது முதல் வெற்றியை ருசித்ததுதான் காரணம். இந்த வரலாற்று வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.