இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 63, பாபர் அசாம் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்திருந்தது.
இதனிடையே இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிபோது இலங்கை வீரர் லசித் எம்புல்தேனியா 13, ஏஞ்சலோ மாத்யூஸ் 13 ரன்கள் எடுத்து வெளியேறினர். இவ்வாறு தடுமாறிக் கொண்டிருந்த அணியை தினேஷ் சண்டிமால் - தனஜெயா இணை சரிவிலிருந்து மீட்டது. இந்த இணை ஆறாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்திருந்தபோது தனஜெயா 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நிரோஷன் டிக்வெல்லாவுடன் ஜோடி சேர்ந்த சண்டிமால் அரைசதத்தை நிறைவுசெய்தார். அதன்பின் சீரான இடைவேளையில் நிரோஷன் டிக்வெல்லா 21, சண்டிமால் 74, தில்ருவான் பெரேரா 48 ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 271 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகின் அப்ரிடி 5, முகமது அப்பாஸ் 4, ஹாரிஸ் சோஹைல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 21, அபித் அலி 32 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: இந்த ஆண்டு மனநிறைவை தரவில்லை: அதிருப்தியில் ஆனந்த்!