நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. அதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 'இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கு ஏதுவாக நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ஆடப்படும் ஒருநாள் போட்டிகளை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 0-1 என்ற நிலையிலிருந்து வென்றுள்ளோம். இந்த வெற்றி இந்திய அணியின் மன வலிமையைக் காட்டுகிறது. இந்திய அணிக்குள் நான் என்று எதுவும் கிடையாது. நாம் என்ற நோக்கில்தான் அனைவரும் செயல்படுகிறோம். அணியின் வெற்றியை மட்டுமே பிரதானமாகக் கருதி செயல்பட்டு வருகிறோம். இந்திய அணி வீரர்கள் அனைவரும், சக வீரர்களின் வெற்றியைக் கொண்டாடுவது பெருமையாக உள்ளது.
கே.எல். ராகுலைப் பொறுத்தவரையில் அனைத்து இடங்களிலும் களமிறங்கி ஆடிவருகிறார். விக்கெட் கீப்பிங் செய்வது அணிக்கு இன்னும் சாதகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அணிக்கு நிச்சயம் இழப்பு தான். ஒரு வீரருக்கு ஏற்படும் காயங்கள் அணியையும் பாதிக்கிறது. கேதர் ஜாதவை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரர். அனைத்து வீரர்களைப் போல்தான் அவரும் நடத்தப்படுகிறார்.
குல்தீப், சாஹல் ஆகியோரை ஒன்றாக விளையாட வைத்து நாள்கள் ஆகிவிட்டது. நேரத்திற்கு தகுந்தாற்போல் அவர்கள் களமிறக்கப்படுவார்கள். சூர்யகுமார் யாதவ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது எனது வேலையல்ல. அது தேர்வுக் குழுவினரிடம் கேட்கவேண்டிய கேள்வி. எனது வேலை, எனக்கு கொடுத்த அணியை தயார் செய்வதே' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பெங்காலின் ஜடேஜாவாக இருக்க விருப்பம்’ - ஹாட்ரிக் நாயகன் அகமது!