நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியும் வென்றன.
இதைத்தொடர்ந்து, டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி ஹாமில்டனில் நடந்த மூன்று நாள் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து லெவன் அணியுடன் மோதியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களும், நியூசிலாந்து அணி 235 ரன்களும் எடுத்தன.
இதைத்தொடர்ந்து, 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நேற்றைய இரண்டாம் ஆட்டநாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை எடுத்திருந்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 35 ரன்களுடனும், மயாங்க் அகர்வால் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இப்போட்டியின் கடைசி ஆட்டநாள் இன்று தொடங்கிய நிலையில், பிரித்வி ஷா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில் எட்டு ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து மயாங்க் அகர்வால் - ரிஷப் பந்த் ஜோடி அதிரடியாக விளையாடியது.
இந்த ஜோடி 134 ரன்களை சேர்த்த நிலையில், ரிஷப் பந்த் 65 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் உட்பட 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 81 ரன்கள் எடுத்திருந்த மயாங்க் அகர்வால், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் ரிட்டையர்ட் அவுட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 48 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை எடுத்திருந்ததால் இப்போட்டி டிராவில் முடிந்தது. சாஹா 30, அஸ்வின் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதைத்தொடர்ந்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: நியூசிலாந்துக்கு புறப்படவுள்ள இஷாந்த் ஷர்மா!