இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் தொடர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணி சார்பில் அபாரமாக விளையாடிய மயாங்க் அகர்வால் 215, ரோஹித் சர்மா 176 ரன்கள் குவித்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி தென்னாப்பிரிக்கா ஆரம்பத்தில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டை இழந்தபோதிலும் தொடக்க வீரர் டீன் எல்கர் - கேப்டன் டூபிளஸ்ஸிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக ஆடிய எல்கர் சதமடித்தார். மறுமுனையில் டூபிளஸ்ஸிஸ் 55 ரன்கள் எடுத்தபோது அஸ்வின் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து டீ காக்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்த எல்கர் 160 ரன்களில் ஜடேஜா பந்தில் வீழ்ந்தார்.
இதனிடையே சிறப்பாக ஆடிய டீ காக் சதமடித்து 111 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வீரரான முத்துசாமி டிராவிட் ரேஞ்சுக்கு கட்டைபோட்டு 106 பந்துகளுக்கு 33 ரன்கள் என அதிகபட்சமாக எடுத்தார். மற்ற வீரர்கள் அஸ்வினின் மாயஜால சுழலில் சிக்கினர்.
போட்டியின் நான்காம் நாளான இன்று 431 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனைத்தொடர்ந்து 71 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரராக முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய மயாங்க அகர்வால், ஏழு ரன்கள் எடுத்தபோது மகராஜா பந்தில் டூபிளஸ்ஸிஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய புஜாரா பொறுமையை கடைப்பிடிக்க, ரோஹித்தும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
உணவு இடைவெளிவரை இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் 106 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.