வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமியர் லீக்கின் 22ஆவது போட்டியில் சோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி டேரன் சமி தலைமையிலானா செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற ஸோக்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்பின் களமிறங்கிய ஸோக்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த காலின் இங்கிராம், காலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தத் தொடங்கினர்.
சிறப்பாக விளையாடிவந்த இங்கிராம் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த கிராண்ட்ஹோம் அரைசதமடித்து அசத்தினார். அவர் 37 பந்துகளில் ஐந்து சிக்சர்கள், மூன்று பவுண்டரிகள் உள்பட 65 ரன்களை எடுத்து அசத்தினார்.
இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. ஸோக்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பென் லாக்லின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்த சந்தர்பால் ஹேம்ராஜும் தனது பங்கிற்கு எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.
பின்னர் சந்தர்பால் ஹேம்ராஜ் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சிம்ரான் ஹெட்மயரும் ஐந்து ரன்களுடன் நடையைக் கட்டினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சோயப் மாலிக் பிராண்டனுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங் 59 பந்துகளில் 81 ரன்களை விளாசி அணியின் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 162 ரன்களை எடுத்து செயின்ட் லூசியா ஸோக்ஸை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதிரடியாக விளையாடி இறுதிவரை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற பிராண்டன் கிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #CPL2019: சூப்பர் ஓவர்- பேட்டிங்-பவுலிங்... கெத்துக்காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!