ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலிஸா ஹீலி, பெத் மூனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் ஆறு ஓவர்களுக்குள் 64 ரன்களை விளாசி எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்தது. சிறப்பாக விளையாடி வந்த ஹீலி 21 பந்துகளில் 43 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் மெக் லன்னிங் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த பெத் மூனியுடன் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆஷ்லீ கார்ட்னர் ரன்குவிப்பில் ஈடுபட்டார். அதிரடியாக விளையாடிய மூனி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
இவர் 61 பந்துகளில் 20 பவுண்டரிகள் உட்பட 133 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை எடுத்தது. அதன்பின், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை கேப்டன் சாமரி அத்தபத்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார்.
சர்வதேச அரங்கில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை மகளிர் அணிக்காக முதல் சதத்தை விளாசியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சாமரி அத்தபத்து 66 பந்துகளை எதிர்கொண்டு ஆறு சிக்சர்கள், 12 பவுண்டரிகள் என 113 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் முதலாவது டி20 போட்டியை வெற்றி பெற்றது.
சிறப்பாக விளையாடி சதமடித்த பெத் மூனி ஆட்டநாயகி விருதைப் பெற்றார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் டூரில் விளையாடப் போகும் இந்திய வீராங்கனைகள் யார் யார்?-