ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டித்தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மதியம் 1.40 மணிக்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றும்.
இந்தியா:
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நழுவவிட்டிருந்தாலும், டி20 தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சன்சு சாம்சன் , மனீஷ் பாண்டே போன்ற நட்சத்திர வீரர்கள் கடந்த போட்டியில் விளையாடினாலும், அதில் கே.எல்.ராகுல், சாம்சன் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மீதமுள்ள வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் நாளைய போட்டியின் போது அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்றார் போல் ஸ்ரேயாஸ் ஐயர், மயங்க் ஆகர்வால் ஆகியோர் தங்களது இடத்திற்காக காத்திருக்கின்றனர்.
அதனால் நாளைய போட்டியில் இருவரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் பந்துவீச்சு தரப்பில் நடராஜன், தீபக் சஹார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளனர். இதனால் நாளைய ஆட்டத்திலும் இதே காம்போ தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் தமிழ்நாடு வீரர் நடராஜன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதேசமயம் முதல் போட்டியில் ரன்களை கொடுத்த முகமது ஷமிக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்குவார் எனவும் தெரிகிறது. தற்போது அணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள விஷயம் ஜடேஜாவின் காயம். இதனால் அவர் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இது இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவருக்கு மாற்றாக யுஸ்வேந்திர சஹால் நாளைய ஆட்டத்திலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தேச அணி: ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கே), சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே/ மயங்க் அகர்வால், ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், டி நடராஜன், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா.
ஆஸ்திரேலியா:
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியுள்ளது.
ஆனால் டி20 தொடரைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி தடுமாற்றத்தை சந்தித்துவருகிறது. அதிலும் காயம் காரணமாக விலகிய வார்னரின் இடத்தை நிரப்ப சரியான வீரரை ஆஸி., அணி தேடி வருகிறது. மேலும் தற்போது புது தலைவலியாக அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் நாளைய போட்டியில் களமிறங்குவார என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்திய அணிக்கெதிரான தொடரில் ஆரோன் ஃபின்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் விலகும் பட்சத்தி ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஸ்மித், ஷார்ட், மேக்ஸ்வெல், ஹென்ட்ரிக்ஸ் என அதிரடியான வீரர்களை கொண்டுள்ள ஆஸி அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருவது நிதர்சனமான உண்மை. இருப்பினும் இவர்களது அதிரடியான ஆட்டம் வெளிப்படும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதி செய்யப்படும்.
பந்துவீச்சில் ஹசில்வுட், ஸ்டார்க் ஆகியோரது வேகத்தில் இந்திய வீரர்கள் திணறுகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக ஹென்ட்ரிக்ஸ், ஸாம்பா ஆகியோர் ரன்களை கட்டுபடுத்துவதால் இதே காம்போ நாளைய போட்டியிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி: ஆரோன் ஃபின்ச்/ டி ஆர்சி ஷார்ட், அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித், ஹென்ரிக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்தேயூ வேட், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஸாம்பா. ‘
இதையும் படிங்க:AUS vs IND : அகர் அவுட் ; லயன் இன் - சந்தேகத்தில் ஃபின்ச்?