இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் பல்வேறு நாட்டு ரசிகர்களாலும் எதிர்பார்ப்படும் முக்கிய கிரிக்கெட் தொடராகும். இத்தொடர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ரசிகர்களால் திருவிழாவைப் போல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஆஷஸ் தொடரின் நான்கு போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளதோடு, ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து தொடரின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக் குறித்து ஆஸ்திரேலியா நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் மனம் திறந்துள்ளார். அதில், சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஒரு வருடம் கழித்து மீண்டும் திரும்பியுள்ளது மனநிறைவாக உள்ளது. நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவியது திருப்தியாக உள்ளது. இரு வெற்றிகளுடன் ஆஷஸ் தொடரை தக்க வைத்துள்ளது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற வேண்டும். ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால் நிச்சயம் சதம் விளாசுவேன். ஏனென்றால் இதுவரை அந்த மைதானத்தில் ஆடிய இரு போட்டிகளிலும் சதம் அடித்துள்ளேன். எனவே நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆஷஸ் தொடரில் மூன்று போட்டிகளில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 671 ரன்களைக் குவித்து உச்சபச்ச ஃபார்மில் உள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.