இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. இந்நிலையில் புதிய கேப்டனுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குசால் மெண்டிஸ், குசால் பெரெரா அதிரடியாக தொடங்கினர். இருபினும் 26 ரன்கள் அடித்திருந்த நிலையில் குசால் மெண்டிஸ் தனது விக்கெட்டை சவுதியிடம் கேட்ச் கொடுத்து இழந்தார். அதனைத் தொடர்ந்து குசால் பெரெராவும் இஷ் சோதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் நிரோஷன் டிக்வெல்லாவும் நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இதன்மூலம் அணியின் ஸ்கோர் உயரத்தொடங்கியது. ஃபெர்னாண்டோ 37 ரன்களிலும், டிக்வெல்லா 39 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இலங்கை அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் செத் ரான்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் சவுதி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் இழக்கத் தொடங்கியது.

அந்த அணியின் காலின் முன்ரோ 13 ரன்களிலும் டிம் செரிஃப்ட் 15, ஸ்காட் குகலீன் எட்டு ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கிராண்ட்ஹோம், புரூஸ் இணை அதிரடியான ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர். இதில் கிராண்ட்ஹோம் 59 ரன்களும் புரூஸ் 53 ரன்களும் அடித்தனர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 165 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்டத்தின் வெற்றிக்கு உதவிய நியூசிலாந்து அணியி கேப்டன் டிம் சவுதி ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.