பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான நசீர் ஜாம்ஷெட், கடந்த 2016 வங்கதேச ப்ரீமியர் லீக், 2017 பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகிய தொடர்களில் சக வீரர்களை மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய தூண்டியதாக புகார் எழுந்தது. இதன்விளைவாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவருக்கு அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட 10 ஆண்டுகளுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும், இந்த மேட்ச் ஃபிக்ஸிங்கில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூசப் அன்வர் (36 வயது), முகமது இஜாஜ் (34) ஆகியோர் முக்கியப்புள்ளியாக விளங்கியதும் தெரியவந்தது. இதனால், யூசப் அன்வர், முகமது இஜாஜ் ஆகியோர் 2018 பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் இருவரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வழக்கை பிரிட்டிஷ் நேஷனல் க்ரைம் ஏஜென்சி வசாரித்துவந்தது.
இந்நிலையில், இந்த மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றத்தை குற்றவாளிகள் மூவரும் ஒப்புக்கொண்டனர். இதனால், நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்களும், யூசப் அன்வருக்கு 40 மாதங்களும், முகமது இஜாஜிற்கு 30 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
"கிரிக்கெட் மூலம் பெயர் கிடைத்த நசீர், தொடர்ந்து அந்த விளையாட்டில் அர்ப்பணிப்புடன் சிறப்பான ஈடுபாட்டை வெளிப்பட்டிருந்தால் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் அமைந்திருக்கும். ஆனால் அவர் குறுக்குவழியை தேர்வு செய்ததால் தான் பெற்ற பெயர், புகழ், அந்தஸ்து, மரியாதை அனைத்தையும் இழந்துவிட்டார்" என நசீர் ஜாம்ஷெட்டின் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக இரண்டு டெஸ்ட், 48 ஒருநாள், 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நசீர் ஜாம்ஷெட் இதுவரை மூன்று சதம், எட்டு அரைசதம் உட்பட 1832 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீணில் முடிந்த ஜடேஜாவின் போராட்டம்... தொடரை இழந்த கோலி அண்ட் கோ!