கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஒத்திவைத்த பிசிசிஐ, ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது. இந்நிலையில் தற்போது வைரஸின் தாக்கம் குறையத்தொடங்கியுள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறவும், பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.
ஜனவரியில் முஷ்டாக் அலி தொடர்:
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான முஷ்டாக் அலி தொடர் வருகிற ஜனவரி 10ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
மேலும் இத்தொடருக்கான மைதானங்களையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலமும் தங்களது உத்தேச அணியை அறிவித்தது.
முரளி விஜய் விலகல்
அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் 26 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்தது. அதில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ஜெகதீசன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் சயீத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து முற்றிலும் விலகுவதாக தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.
அணியில் இருவர் சேர்ப்பு
இதையடுத்து முரளி விஜய்க்கு மாற்று வீரராக நடுவரிசை வீரர் சூர்யபிரகாஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் விக்னேஷிற்கு பதிலாக ஜெகன்நாத் ஸ்ரீனிவாசன் அணியில் இணைந்துள்ளார்.
தமிழ்நாடு அணி: தினேஷ் கார்த்திக், அபாரஜித், இந்தரஜித், விஜய் சங்கர், ஷாருக் கான், சூர்யபிரகாஷ், ஹரி நிஷாந்த், பிரதோஷ் ராஜன் பவுல், அருண் கார்த்திக், ஸ்ரீனிவாசன், ஜெகதீசன், அபினவ், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, பெரியசாமி, சந்தீப் வாரியர், ஹரிஸ் குமார், ஜெகன்நாத் ஸ்ரீனிவாசன், சிலம்பரசன், கௌசிக், சோனு யாதவ், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், சித்தார்த், சத்தியநாராயணன், யாழ் அருண் மொழி.
இதையும் படிங்க:’தனது ஓய்வு முடிவுக்கு அணி நிர்வாகம் தான் காரணம்’ - முகமது அமீர் குற்றச்சாட்டு!