கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, இம்மாதம் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் டி20 தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டும், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணி வீரர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரும், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரருமான டுவைன் பிராவோ, சென்னை அணியின் கேப்டன் தோனி எப்போதும் என்மீது நம்பிக்கை வைத்திருப்பவர் என்று தெரிவித்தார்.
இன்ஸ்டா நேரலையில் பிராவோ கூறுகையில், எங்களை பொருத்தவரையில் சிஎஸ்கே என்பது அணி கிடையாது, மாறாக இது எங்களுக்கு மற்றொரு வீடாகும். நாங்கள் இவ்வணிக்காக பல ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து விளையாடி வருகிறோம். இதன்மூலம் இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். நான் பல அணிகளில் விளையாடியுள்ளேன். அனால் அனைத்து அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸாக மாறிவிடாது.
சென்னை அணியின் கேப்டன் தோனி, அணியின் பயிற்சியாளர் ஃபிளம்மிங் இருவரும் எப்போதும் என்மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள். அவர்கள் என்னை எனது போக்கில் விட்டுவிடுவார்கள். சில சமயங்களில் நான் வீசும் டெத் ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் மீண்டும் என்மீது நம்பிக்கை வைத்து டெத் ஓவர்களில் பந்துவீசும் படி கூறுவார்கள். என் திறன் மீது அவர்களுக்கு அதிகளவில் நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நான்கு மாத ஊதியத்தை விட்டுக்கொடுத்த ரோமா அணி!