2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அதன் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ரன் அவுட்டாகியது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அந்த ரன் அவுட் இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவையும் சுக்குநூறாக்கியது. அதையடுத்து தோனியும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருக்கிறார். இந்திய ரசிகர்களை இது, மேலும் சோகத்தில் தள்ளியது.
உலகக்கோப்பைத் தொடர் குறித்தும், கிரிக்கெட்டிற்கு எப்போது மீண்டும் திரும்புவேன் என்பது குறித்தும் தோனியிடமிருந்து இதுவரை எவ்வித தகவலும் வெளிவராமல் இருந்தது. இன்று தோனி முதல்முறையாக உலகக்கோப்பைத் தொடர் குறித்து மௌனம் கலைத்துள்ளார்.
அதில், ''எனது முதல் ஒருநாள் போட்டியில் நான் ரன் அவுட் ஆனேன். உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன். பெவிலியன் திரும்பும்போது என்னை நானே கேட்டுக்கொண்டது, நான் ஏன் டைவ் அடிக்கவில்லை. நான் டைவ் அடித்திருந்தால் நிச்சயம் அந்த இரண்டு இஞ்ச்களை எட்டியிருப்பேன்'' எனப் பேசியுள்ளார்.
பெரும்பாலும் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்குப் பின், தோனி எந்த வெற்றியும் தோல்வியும் தன்னைப் பாதிக்காவாறு பார்த்துக்கொள்வார். எவ்வளவு பெரிய வெற்றிபெற்றாலும் இரு மணி நேரத்தில் தோனி அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிடுவார் என பலரும் கூறியுள்ளனர். ஆனால் இந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியின் தோல்வி தோனியை வெகுவாக பாதித்துள்ளதாக தெரிகிறது.
மேலும் ஜனவரி மாதம் வரை கிரிக்கெட்டுக்கு திரும்புவது பற்றி என்னிடம் கேட்கவேண்டாம் என தோனி கூறியிருந்தார். அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடருக்கு பிறகு தோனி, தனது பயிற்சிகளை மீண்டும் தொடங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டின் பிகாசோ! #RAHULDRAVID