இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி என்றால் நம் அனைவருக்கும் முதலில் தோன்றுவது அவரது அதிரடியான கிரிக்கெட், ஹெலிக்காப்டர் ஷாட், உலகக்கோப்பை வென்று தந்தது போன்ற நிகழ்வுகள் தான். கிரிக்கெட் தவிர்த்து தோனிக்கு கால்பந்து, ராணுவம், பைக், கார் போன்றவற்றிலும் அலாதி பிரியம் இருக்கிறது என்பது பற்றி தோனியை முழுமையாக தெரிந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
அந்த வகையில் தோனி தனது வீட்டிலுள்ள கேரேஜ்ஜில், ஃபெர்ராரி, ஹம்மர், ஜிஎம்சி சியர்ரா போன்ற விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு கார்களை வைத்துள்ளார். இது தவிர கவாஸ்கி நின்ஜா, ஹயபூசா போன்ற பைக்குகளையும் வைத்துள்ள தோனி அவ்வபோது அவற்றில் ஊரைச் சுற்றி பார்ப்பது வழக்கம்.
அவரது இந்த சொகுசு வாகனப் பட்டியலில் ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாக் என்ற புதிய எஸ்யுவி ரக கார் இணைந்துள்ளது. அந்த காரின் வருகை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் மனைவி சாக்ஸி, கடந்த மாதம் பதிவிட்டிருந்தார். அச்சமயத்தில் தோனி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் அந்த கார் தோனியை மிஸ் செய்வதாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில் ராணுவத்தில் இருந்து திரும்பிய தோனி தற்போது தனது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வீட்டில் உள்ளார். இந்நிலையில் தோனி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது புதிய ஜீப் வாகனத்தை ஓட்டிக் கொண்டு ராஞ்சி நகருக்குள் சென்றுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவரது காருடன் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டனர்.
சிவப்பு நிறத்தில் இருக்கும் கம்பீர தோற்றம் கொண்ட அந்த காரில் தோனி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி மெதுவாக நகர்கிறார். இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.
தோனி வாங்கியுள்ள இந்த புதிய கார் அந்த மாடலில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அந்த காரின் மதிப்பு 90 லட்சமாகும்.