கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் வருகிற 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான வீரர்கள் அனைவரும் கடந்த மாதமே ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர் நடைபெற்று வருவதால், ஐபிஎல் தொடரின் ஒரு சிலப் போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியது. இதற்கிடையில் ஐபிஎல் தொடரின் அட்டவணையை செப்.06ஆம் தேதி ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேகேஆர் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் வெங்கி மைசூர், 'எங்கள் அணியின் தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் ஆகியோர் இடம்பெறுவர். ஏனெனில், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர் செப்.17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேசமயம் கேகேஆர் அணியின் முதல் போட்டியும் செப்.23ஆம் தேதியே தொடங்கிறது.
அதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலும், எங்கள் அணியின் தொடக்க போட்டிகளில் அவர்களால் பங்கேற்க இயலும்' என்று தெரிவித்துள்ளார்.
வருகிற செப். 23ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யூ.எஸ். ஓபன்: செரீனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அஸரென்கா!