உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை ஏழாவது முறையாக வீழ்த்தி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.
மழைக்காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட இப்போட்டியில், பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களிலும் கடுமையாக சாடினர். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ் கானின் உடற்தகுதி குறித்து பெரிதும் கேலி செய்தனர். மேலும், கோபத்தின் உச்சத்தில் ஒரு சில ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சளர் முகமது அமீர், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், 'தயவு செய்து கிரிக்கெட் வீரர்களை கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டாம். நீங்கள் எங்களின் விளையாட்டை விமர்சிக்கலாம். நாங்கள் அதை திருத்திக்கொள்வோம். எங்களுக்கு உங்களின் ஆதரவு தேவை' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.