இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அணியிலிருந்து முகமது ஆமிர், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பேசுகையில், '' ஆகஸ்ட் மாதத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஆமிருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால், மனைவியுடன் இருக்க வேண்டும் என அவர் எண்ணுகிறார். இதனால் தொடரிலிருந்து அவரே விலகியுள்ளார். இதேபோல் சொந்த பிரச்னைகள் காரணமாக ஹாரிஸ் சோஹைல் விலகியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பாகிஸ்தான் அணி சார்பாக 29 வீரர்களும், 14 பேர் கொண்டு பயிற்சியாளர்கள் குழுவினரும் செல்லவுள்ளனர்.
இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்னதாக தேசிய முகாம் ஒன்று ஏற்பாடு செய்யத் திட்டமிட்டோம். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த முகாம் பற்றிய திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடன் ஜூலை வாரத்திலேயே வர அனுமதி கோரியுள்ளோம். அப்போது தான் வீரர்களுக்கு பயிற்சி வழங்க முடியும்.
பாகிஸ்தானிலிருந்து கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னதாக அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஐசிசியும், அரசும் விதித்துள்ள அனைத்து பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படும்'' என தெரிவித்தனர்.