இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 13ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் வரும் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த ஏலத்திலிருந்து ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தொடர்ந்து இரண்டாவது முறையாக விலகியுள்ளார். 2018ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்காக 9.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் ஒப்பந்தமான இவர், காயம் காரணமாக அந்தத் தொடரில் பங்கேற்காமல் இருந்தார். அதேபோல், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை.
பொதுவாக, ஐபிஎல் தொடரில் விளையாடும் பெரும்பாலன வெளிநாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தற்போது வழக்கமாக இருக்கிறது. கடந்த ஐபிஎல் சீசனில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேலே ஸ்டெயின் உள்ளிட்ட சிலர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினர்.
அதேசமயம், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. எனவே, இதன் காரணமாகதான் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார் என தெரிகிறது. 2014இல் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தமான இவர், 2015 தொடரில் பெங்களூரு அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். இந்தத் தொடரில் (2015 சீசன்) தான் அவர் இறுதியாக ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதுவரை 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவரைப்போல இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் பெயரும் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவில்லை. ஸ்டார்க்கைத் தவிர, மேக்ஸ்வெல், நாதன் லயான் உள்ளிட்ட ஏழு வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். இந்த ஏலத்தில் 713 இந்திய வீரர்கள், 258 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 971 வீரர்களிலில் 73 பேர் மட்டுமே தேர்வாகவுள்ளனர்.
இதையும் படிங்க: 2.1 ஓவர்... 0 ரன்... ஆறு விக்கெட் ! டி20யில் உலக சாதனை படைத்த நேபாள வீராங்கனை