வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி டி20 தொடரில் விளையாடியது. ஏற்கெனவே இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, இன்று டாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரெண்டன் டெய்லர் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டெய்லர், சர்வதேச டி20 போட்டியில் தனது ஆறாவது அரை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால், ஸ்கோரை உயர்த்த அணி தடுமாறியது.
![ஜிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6375005_toyler.jpg)
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து, 119 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் 59 ரன்களை எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச அணி சார்பில் முஷ்தபிசூர் ரஹ்மான், அமின் ஹொசைன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நைம் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இதில் நைம் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
![வங்கதேச அணியின் லிட்டன் தாஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6375005_liton.jpg)
மறுமுனையில் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த லிட்டன் தாஸ், சர்வதேச டி20யில் தனது நான்காவது அரை சதத்தையடித்து அசத்தினார். இதன் மூலம் வங்கதேச அணி 15.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கையடைந்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் வங்கதேசம் அசத்தியது. இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்த லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க:'ஃபினிஷிங்கில் தோனி தான் மாஸ்டர்': ஜஸ்டின் லாங்கர்