கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபில் தொடர் ஐக்கிய அரசு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு, வருகிற செப்.19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான ஐபிஎல் அணி வீரர்கள் அனைவரும் கடந்த வாரமே ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றனர்.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும் என நினைத்திருந்தேன். ஆனால் அத்தொடரில் நான் நினைத்தது ஏதும் நடக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய குல்தீப் யாதவ், ”நாங்கள் கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என்ற உணர்வு சீசன் தொடக்கம் முதலே இருந்தது. மேலும் 2018ஆம் ஆண்டில் நாங்கள் சிறப்பாகவே விளையாடி இருந்தோம். அதனால் சென்ற ஆண்டும் கோப்பையை வெல்வோம் என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் சன் ரைசர்ஸ் அணியுடனான ஆட்டத்தில் எங்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
நாங்கள் அவர்களை 145 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்திருந்தோம். ஆனால் அந்த அணியின் ரஷீத் கான் மொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றி விட்டார். நாங்கள் அந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவியது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்தத் தோல்வியினால்தான் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. என்னவாக இருப்பினும் இது கிரிக்கெட். இன்று இல்லையெனில் இன்னொரு நாள் வெல்வோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : இரண்டாவது டி20: மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி!