இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துவருபவர்தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக், தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு அடுத்தபடியாக கோலி பெரும் ரசிகர் பட்டாளத்தை உடையவராகத் திகழ்கிறார்.
கோலி மீது அன்புகொண்ட அவரது ரசிகர்கள் சில சமயங்களில் வியக்கத்தக்க விஷயங்களில் ஈடுபட்டு பலரின் கவனத்தையும் ஈர்ப்பதுண்டு. அந்தவகையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியைக் காணவந்த சிராக் கில்லாரே என்ற ரசிகர், தனது வித்தியாசமான ஹேர் டாட்டூவால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
காரணம் கில்லாரே தனது தலையின் பின்புறம் கோலியின் முகத்தை டாட்டூவாக பொறித்திருந்தார். இது மைதானத்தில் இருந்த ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனிடையே இது குறித்து பேசிய அந்த ரசிகர், இந்தியா அண்டர்-19 அணியின் கேப்டனாகக் கோலி நியமிக்கப்பட்டதிலிருந்தே அவரது ரசிகனாக உள்ளேன். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நான் பல வருடங்களாக பார்த்துவருகிறேன்.
நான் அவரை தூரத்திலிருந்து மட்டுமே பார்த்துள்ளேன். அவரைப் பார்க்க வேண்டும் என்பதே எனது கனவு. அவ்வாறு கோலியை அருகில் பார்க்கும்போது அவரது காலில் விழுவேன். பின் அவரை அணைத்துக் கொண்டு இருப்பது போன்ற புகைப்படமும் எடுத்துக் கொள்வேன் என்றார்.
மேலும், இந்த ஹேர் டாட்டூவை உருவாக்க ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஆகும் என்றும், கோலி விளையாடும் ஒவ்வொரு போட்டியைக் காணவும் இவ்வாறே செல்வேன் என்றும் அந்த ரசிகர் தெரிவித்தார்.
நேற்றையப் போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.
இதையும் படிங்க: சதத்துடன் சாதனை - மும்பையில் அடிச்சு தூக்கிய வார்னர்!