2012 இல் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இந்த தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்
இந்நிலையில் இந்த தொடரின் போது தான் கோலியின் முன்னாள் காதலியுடன் பேசியதால் அவர் திட்டியதாக நிக் காம்ப்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
"அந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் அகமதாபாதில் நான் கெவின் பீட்டர்சன், யுவராஜ் சிங் ஆகியோர் வெளியே சென்றோம். அப்போது கோலியின் முன்னாள் காதலியுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அது விராட் கோலிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
பிறகு அந்த தொடரில் ஒவ்வொரு முறை நான் பேட்டிங் செய்ய செல்லும்போதும் கோலி என்னை நோக்கி ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டே இருந்தார். அவர் தன் காதலி என்று கோலி கூறினார். ஆனால் அவரோ கோலி தன் முன்னாள் காதலர் என்று கூறினார்.
இதில் யார் தான் இந்தக் கதையை சரியாக சொல்கிறார்கள் என்று தான் எனக்கு தோன்றியது. இந்த வேடிக்கையான விஷயத்தை வைத்துக்கொண்டு நாங்கள் கோலியை வழி அனுப்பினோம்" என்றார்.
இங்கிலாந்து அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிக் காம்ப்டன் 2 சதங்கள் உட்பட 775 ரன்களை குவித்துள்ளார்.