ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரைப் போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் டிஎன்பிஎல் தொடர். இந்தத் தொடர் விஜய் சங்கர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், அருண் சக்ரவர்த்தி, முருகன் அஸ்வின் என பல இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டுவந்து அவர்களில் சிலர் இந்திய அணியிலும் இடம்பெறவும் காரணமாக அமைந்தது.
டிஎன்பிஎல் தொடரில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, காஞ்சிபுரம் என எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் அடுத்த சீசனில் இரு மிகப்பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் மிக முக்கிய மாற்றமாக கருதப்படுவது டிஎன்பிஎல் தொடக்க சீசனில் கோப்பையைக் கைப்பற்றிய டூட்டி பேட்ரியட்ஸ் அணியும், காரைக்குடி காளைஸ் அணியும் இந்தாண்டுக்கான சீசனிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு அணிகளுக்கும் பதிலாக சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் என்ற இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அடுத்த சீசனில் விளையாடும் வீரர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் புதிய அணியான சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், பெரியசாமி, முருகன் அஸ்வின், அகில் ஸ்ரீநாத் உள்ளிட்ட சாம்பியன் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.
அதே வேளையில் மற்றொரு புதிய அணியான திருப்பூர் தமிழன்ஸ் அணியிலும் தினேஷ் கார்த்திக், மான் கே பஃப்னா, அஸ்வின் கிறிஸ்ட், மோகன் பிரஷாத் என நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், வரவிருக்கும் டிஎன்பிஎல் போட்டிகள் இரண்டு புதிய மாநகரில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது. தற்போது சேலம், கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் சர்வதேச தரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானங்களில் இந்தாண்டுக்கான போட்டிகளை நடத்தவும் டிஎன்பிஎல் முடிவெடுத்துள்ளது. இதனால், டிஎன்பிஎல் ஐந்தாவது சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பாத்ரூம் சிங்கர் தோனி - இணையத்தில் வைரலாகும் வீடியோ!