ஹரியானா மாநிலத்தில் பிறந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவை 1983இல் நனவாக்கியவர் கபில்தேவ். இவரது தலைமையின் கீழ்தான் இந்திய அணி முதல்முறைாக 1983இல் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.
கேப்டன்ஷிப் மட்டுமில்லாமல், கபில்தேவ் பேட்டிங், பவுலிங், ஃபில்டிங் என அனைத்திலும் கில்லியாக திகழ்ந்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்தார். 1978 முதல் 1994ஆம் ஆண்டு வரை கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட், 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும், 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், ஹரியானாவின் சோனிபேட்டில் மூன்று ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் விளையாட்டு பள்ளி தற்போது விளையாட்டு பல்கலைக்கழகமாக மேம்படுத்துப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழத்தின் முதல் வேந்தராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அம்மாநில விளையாட்டு அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு பெருமைகளை தேடித் தநத்தற்காக கபில்தேவிற்கு இத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹரியானா விளையாட்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் ஒரு மாநில அரசால் நிறுவப்பட்ட மூன்றாவது விளையாட்டு பல்கலைக்கழகம் ஆகும். இதற்கு முன்னதாக, விளையாட்டு பல்கலைகழகம் காந்திநகர் (குஜராத்) மற்றும் சென்னையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.